02:27
கேப்டன் ரெய்னா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் விளையாடி வருகிறது. முதலில் 20 ஓவர் போட்டியில் இந்தியா விளையாடி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் இந்தியா முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்த நிலையில் 3-வது ஒருநாள் போட்டி நாளை ஆன்டிகுவாவில் நடக்கிறது. இதில் இந்தியா 3-வது வெற்றியை பெற்று தொடரை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் 2 போட்டியிலுமே சிறப்பாக விளையாடினர். கேப்டன் ரெய்னா, வீராட் கோலி, ரோகித் சர்மா, பார்த்தீவ் பட்டேல், பத்ரி நாத், தவான் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக உள்ளனர்.
இதேபோல் முனாப்பட்டேல், அமித் மிஸ்ரா ஆகியோர் பந்துவீச்சில் நல்ல நிலையில் உள்ளனர். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றில் இந்தியா பலமாக உள்ளது. எனவே நாளைய போட்டியிலும் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது.
வெஸ்ட்இண்டீசில் அதிரடி ஆட்டக்காரர் கெய்ல் இல்லாதது அந்த அணிக்கு பலவீனமே. என்றாலும் இந்தியாவை தொடரை கைப்பற்ற விடக்கூடாது என்பதற்காக வெஸ்ட்இண்டீஸ் நாளை கடுமையாக போராடும். தங்கள் சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். இந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இந்த ஆட்டம் தூர்தர்ஷன் மற்றும் டென் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
