02:27

இங்கிலாந்தின் உள்ளூர் டுவென்டி-20 போட்டியில் பங்கேற்க அனுமதி தர வேண்டும் பாகிஸ்தான் கிரிக்கட் வாரியத்திற்கு(பி.சி.பி) அப்ரிடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கப்டன் பதவியில் இருந்து நீக்கியதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சர்வதேச கிரிக்கட்டில் இருந்து அப்ரிடி ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தவிர பி.சி.பி நிர்வாகிகள் குறித்தும் பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டார்.
இதனால் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து அப்ரிடியை பி.சி.பி நீக்கியது. தவிர இவருக்கு வழங்கப்பட்ட அனைத்து தடையில்லா சான்றிதழ்களையும் திரும்பப் பெற்றது.
இதனால் அப்ரிடி இங்கிலாந்து, இலங்கை என எந்த நாட்டிலும் உள்ளூர் "டுவென்டி-20" போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து ஹாம்ஷையர் அணிக்காக டுவென்டி-20 போட்டியில் பங்கேற்க அனுமதி தரவேண்டும் என பி.சி.சி.யிடம் அப்ரிடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பி.சி.பி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"கிரிக்கட் வாரியத்தின் விதிகளை மீறியதை ஒப்புக் கொண்டுள்ள அப்ரிடி தனக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை சந்திக்க தயாராக உள்ளதாக பதில் அனுப்பியுள்ளார். தவிர இங்கிலாந்தில் டுவென்டி-20 போட்டியில் பங்கேற்க அனுமதி கடிதம் வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்" என்றார்.
இதனிடையே அப்ரிடியின் கருத்துக்கள் குறித்து பயிற்சியாளர் வகார் யூனுஸ் கூறுகையில்,"அப்ரிடி என்ன கூறினார் என்று ஊடகங்கள் மூலம் தான் தெரியும். பி.சி.பி தலைவரை நேரில் சந்தித்த பின் தான் என்ன பிரச்னை என்று தெரியவரும். இந்நிலையில் இதுதொடர்பாக எந்த கருத்தும் கூறுவது சரியாக இருக்காது" என்றார்.
