01:15

அப்ரிதியை கப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கு பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் முறையான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் கப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது, அப்ரிதி கப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டார். அணியை திறம்பட வழிநடத்தினார். அவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறியதோடு, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்றது. எனவே சிறப்பாக வழிநடத்திச் சென்ற அப்ரிதியை கப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கு போதுமான சரியான காரணங்களை பிசிபி தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற பெரிய முடிவுகளை அவர்கள் அதிரடியாக எடுத்திருக்கக்கூடாது. அவரை நீக்கிய பிறகாவது அவர்கள் அதற்கான காரணத்தை தெரிவித்திருக்க வேண்டும் என்றார்.
அப்ரிதி கிரிக்கட் வாரியத்தை விமர்ச்சித்துள்ளது குறித்து கருத்துத் தெரிவித்த வாசிம் அக்ரம், இதில் அப்ரிதியின் கருத்தை ஆதரிக்க முடியாது. கப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டவுடன் அவர் ஊடகங்கள் முன்னிலையில் கிரிக்கட் வாரியத்தை விமர்சித்திருக்கக்கூடாது. இதுதொடர்பாக முதலில் கிரிக்கட் வாரியத்திடம் தான் பேசியிருக்க வேண்டும். அப்ரிதியின் இந்தச் செயல் பாகிஸ்தான் கிரிக்கட் வாரியத்தின் புகழுக்கு பங்கம் விளைவித்துள்ளது என்றார்.
அப்ரிதி பாகிஸ்தான் அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்று கூறிய அவர், அவருக்கு இப்போது 31 வயது தான் ஆகிறது. அதனால் அவர் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் விளையாட முடியும். அது பாகிஸ்தான் கிரிக்கட்டுக்கு நல்லதாக அமையும் என்றார். அப்ரிதி - பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் இடையிலான மோதல் குறித்துப் பேசிய அக்ரம், ஏற்கெனவே சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் சீரழிந்து காணப்படும் பாகிஸ்தான் கிரிக்கட்டை இந்தப் பிரச்சினை மேலும் அசிங்கப்படுத்தியுள்ளது. எங்கு சென்றாலும் பாகிஸ்தான் கிரிக்கட்டில் என்ன தவறு நடந்து கொண்டிருக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள். அவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.
பாகிஸ்தானில் மட்டும் தான் பயிற்சியாளர் அதிக அதிகாரங்களை பெற்றிருக்கிறார். மற்ற நாடுகளில் கப்டனின் கருத்துக்கே பயிற்சியாளர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்திய கேரி கிறிஸ்டனை இன்னும் நிறைய பேருக்கு தெரியாது. எனவே வக்கார் யூனிஸ் அணி தேர்வில் அதிகாரம் செலுத்தாமல் வீரர்களை சிறப்பாக விளையாட வைக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
கிரிக்கட் போட்டியை பொறுத்தவரை கப்டனே அணியை வடிவமைக்கிறார். அவரே முடிவெடுக்க வேண்டும். அப்ரிதி விவகாரத்தில் பிரச்சினை தொடருமானால் அது பாகிஸ்தான் கிரிக்கட்டின் புகழை அழிப்பதாக அமையும். எனவே இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் விரைவில் தீர்வு காண வேண்டும் என்றார்.
