04:18
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.,) செயல்பாடுகளில் இந்திய அரசு தலையிடக்கூடாது என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.,) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.வரும் மழைக்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரில், விளையாட்டு அமைப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர, மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஐ.ஓ.ஏ., பொதுச்செயலர் ரந்திர் சிங்கிற்கு, ஐ.ஓ.சி., யின் பெரே மிரோ எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பது:
தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு (என்.எஸ்.எப்ஸ்.,), அந்தந்த அரசுகள் ஆலோசனைகள், கருத்துக்களை வழங்கலாம். ஆனால் அவர்களுக்கு என்று உள்ள விதிகளில், தலையிட உரிமையில்லை. இதுபோன்ற செயல்கள் ஒருதலைப்பட்சமான முடிவாக அமைந்து விடும்.
இந்த அமைப்புகளின் அனைத்து உள்விவகாரங்களும் அதாவது, <உறுப்பினராக இருப்பதற்குரிய தகுதிகள், முடிவு எடுப்பது, தேர்தல் மூலம் நிர்வாகிகளை தேர்வு செய்வது, நிர்வாகிகளுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் பல விதிகளை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தான் முடிவு செய்கின்றது.
தேசிய ஒலிம்பிக் சங்கம், தேசிய விளையாட்டு கூட்டமைப்பு தொடர்பான அனைத்து நடைமுறைகளிலும், இவர்கள் சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகளுடன் தொடர்பு கொண்டு தான் செயல்பட வேண்டும்.
இந்நிலையில் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளை, பொதுவாக நடத்தக்கூடாது. இது தனியார் நிறுவனம் போன்றது. சுதந்திரமாக செயல்பட, சட்டப்படி இந்த அமைப்புகளுக்கு உரிமை <உள்ளது. அதேநேரம் இவைகள் அரசின் நிதி மூலம், ஏதாவது ஒருவகையில் பயன் பெறுகின்றன என்பதை மறுக்க முடியாது.
ஆனால், இதற்கும் சட்டவிதிகளுக்கும் தொடர்பில்லை. இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள சட்டதிருத்தம், என்.எஸ்.எப்ஸ்.,ன் அடிப்படை விதிகளை மீறாமல் இருக்க வேண்டும். தவிர, இதன் செயல்பாடுகளில் தலையிடும் வகையில் இருக்கக்கூடாது.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
