22:28
பாகிஸ்தான் செல்ல இலங்கை அணி மறுத்துள்ளதால், அங்கு விளையாட வேண்டிய போட்டிகளை ஜிம்பாப்வேயில் நடத்த, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2009 ம் ஆண்டு, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில் உதவி பயிற்சியாளர் உட்பட ஏழு வீரர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பின், அங்கு எந்த அணியும் போட்டிகளில் பங்கேற்க செல்ல மறுக்கின்றன. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அட்டவணைப்படி வரும் அக்டோர்-நவம்பர் மாதங்களில், இலங்கை அணி பாகிஸ்தானில் மூன்று டெஸ்ட், ஒரு "டுவென்டி-20', ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க வேண்டும். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக, பாகிஸ்தான் செல்ல இலங்கை அணி மறுத்துள்ளது. இந்த போட்டிகளை இலங்கையில் நடத்தலாம் என, இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. அதேபோல, அடுத்த ஆண்டு இங்கிலாந்து அணி, பாகிஸ்தானில் பங்கேற்க வேண்டிய போட்டிகளையும், இலங்கையில் நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பி.சி.பி., செய்தித் தொடர்பாளர் நதீம் சர்வார் கூறுகையில்,"" இலங்கைக்கு எதிரான போட்டித் தொடரை, நாங்கள் ஜிம்பாப்வேயில் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளோம். ஏனெனில் இங்கு குறைவான செலவுகளே ஏற்படும் என்பதால், ஓரளவுக்கு பி.சி.பி.,க்கும் வருமானம் கிடைக்கும்,'' என்றார்.
