22:25
"வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்று வருவதை, எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது,'' என, இந்திய அணியின் கேப்டன் ரெய்னா தெரிவித்துள்ளார். சீனியர் வீரர்கள் சச்சின், தோனி, காம்பிர், சேவக் மற்றும் யுவராஜ் சிங் போன்றவர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு தரப்பட்டது. இதனால் இளம் வீரர்கள் அடங்கிய இரண்டாம் தர இந்திய அணி, ரெய்னா தலைமையில் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. முதலில் நடந்த "டுவென்டி-20' போட்டியில் வென்று கோப்பை வென்ற இந்திய அணி, தற்போது நடக்கும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது.தற்போதைய கேப்டன் ரெய்னா கூறியது:
வெஸ்ட் இண்டீசில் போட்டிகளில் பங்கேற்று வரும் இந்திய அணி குறித்து, முதலில் இரண்டாம் தர அணி என்றார்கள். தற்போது திறமையாக செயல்பட்டு, வெற்றி பெற்று வருவதை பார்த்தவுடன், வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறப்பான வீரர்கள் இல்லை. அந்த அணி பலவீனமாக உள்ளது என்கின்றனர். எங்களது வெற்றியை யாரும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
பயிற்சியாளரின் வியூகம்: உண்மையை சொன்னால் நாங்கள் அனைவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றோம். இரண்டாவது ஒருநாள் போட்டியில், வெற்றிக்கு 15 ஓவரில் 83 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், நான் களமிறங்கினேன். இது எங்களது பயிற்சியாளரின் வியூகம் தான்.
எளிதான வெற்றி: ஏனெனில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரண்டு "லெக் பிரேக்' பவுலர்கள் இருந்த நிலையில், வலது-இடது கை பேட்ஸ்மேன்கள் கூட்டணி, அணியின் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தோம். இதனால் தான் மறுமுனையில் விராத் கோஹ்லி, பதட்டமில்லாமல் செயல்பட முடிந்தது. எங்களது இந்த திட்டத்தால், வெற்றி எளிதானது.
சிறப்பான அணி: கடந்த ஆண்டு ஜிம்பாப்வே சென்ற போது இருந்த அணியை விட தற்போதைய இந்திய அணி சிறப்பானது. அணியில் அனுபவம் வாய்ந்த பவுலர்கள் ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, பிரவீண் குமார், முனாப் படேல் ஆகியோர் எவ்வித கடினமான ஆடுகளத்திலும், நல்ல பவுலிங்கை வெளிப்படுத்துகின்றனர். ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் காயமடைந்த நிலையில், முதன் முறையாக டெஸ்ட் அணியில் இடம் பெற்ற உற்சாகத்தில் உள்ளார் பிரவீண் குமார். இதனால் எதிர்வரும் டெஸ்ட் தொடரிலும் சாதிப்பார் என்று நம்பலாம். இவ்வாறு ரெய்னா கூறினார்.பிளட்சர் மகிழ்ச்சி: இந்திய அணியின் வெற்றி குறித்து புதிய பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் கூறியது: அணியிலுள்ள அனைவரும் வீரர்கள் தான். இவர்களது செயல்பாடுகளில், ஒருசில ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். எப்போதும் நன்கு செயல்பட இயந்திரம் அல்ல. வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரையில் சாதாரண அணி அல்ல. அவர்கள் சர்வதேச அளவில் சிறந்து விளங்குபவர்கள் தான். இதை அவர்கள் பலமுறை நிரூபித்து உள்ளனர். இவர்களுக்கு எதிராக பெறும் வெற்றி மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளது. இத்தொடரில் இளம் வீரர்கள் நன்கு திறமை வெளிப்படுத்தி வருகின்றனர். இது இந்திய கிரிக்கெட்டின் தரத்தை காட்டுகின்றது. ஐ.பி.எல்., தொடர் இந்த இளம் வீரர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இதன் மூலம் எதிர்கால இந்திய கிரிக்கெட் சிறந்து விளங்குவது உறுதி. இவ்வாறு டங்கன் பிளட்சர் கூறினார். ---
