
22:17
இலங்கை பிரிமியர் லீக் தொடரில் அசத்த காத்திருக்கிறார் இந்திய வீரர் பால் வல்தாட்டி. இந்தியாவில் நடந்த நான்காவது ஐ.பி.எல்., தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார் பால் வல்தாட்டி. அதிரடியாக பேட் செய்த இவர் 14 போட்டிகளில் 463 ரன்கள் குவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான லீக் போட்டியில் 68 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். ஐ.பி.எல்., தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய வீரருக்கான விருதினையும், காரையும் பரிசாக பெற்றார். காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இவரால் இடம் பெற முடியவில்லை. இது குறித்து வல்தாட்டி கூறியது: ஏற்கனவே என்னிடம் கார் உள்ளது. ஆனால், ஐ.பி.எல்., தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக கிடைத்த கார் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இம்முறை நன்றாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை, தொடர் துவங்கும் முன்பே இருந்தது. போட்டிகளின் போது ஒரு முனையில் நானும் மறுமுனையில் பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட்டும் இருப்பார். அனுபவ வீரரான இவர் பேட்டிங் குறித்து நிறைய ஆலோசனைகள் வழங்கினார். அதிரடி ஆட்டத்தை கொடுத்த, அவர் என்னுடைய "ஹீரோ'வாக திகழ்கிறார். சகஜமாக பழகக் கூடியவர். இலங்கையில் அடுத்த மாதம் துவங்க உள்ள பிரிமியர் லீக் தொடரில் விளையாட உள்ளேன். தற்போதைய ஐ.பி.எல்., தொடரில் செயல்பட்டதை போல் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. கிரிக்கெட் மூலம் என்னுடைய வாழ்க்கை தரம் மாறி உள்ளது. மக்கள் எனக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர். கிரிக்கெட்டில் மிகப்பெரிய இடத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு வல்தாட்டி கூறினார்.