22:14

"சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் போதே ஓய்வு பெற்றுவிட வேண்டும் என நான் எடுத்த முடிவு சரியானது தான்,'' என, இலங்கை வீரர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தைய முரளிதரன் (39). 133 டெஸ்ட், 350 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 1334 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். சமீபத்தில் முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்த ஓய்வு பெற்றார். இதுகுறித்து முரளிதரன் கூறியது:சர்வதேச கிரிக்கெட்டில் என்னால் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு விளையாட முடியும். ஆனால் மோசமான "பார்ம்' காரணமாக, அணியில் இருந்து நீக்கப்பட்டு பின் ஓய்வு பெறுவதை விட, சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் போதே ஓய்வு பெற்றுவிட வேண்டும் என விரும்பினேன். எனது இந்த முடிவு சரியான நேரத்தில் எடுத்தது தான் என்று நினைக்கின்றேன். எனது 19 வது வயதில் இலங்கை அணியில் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து 18 ஆண்டுகளாக தொடர்ந்து கிரிக்கெட்டில் நீடித்து வருகின்றேன். எனது ஓய்வு காரணமாக மெண்டிஸ், ரந்திவ், ஹெராத் போன்றவர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும். அவர்களும் தங்கள் திறமைகளை நிரூபிக்க முடியும். கடந்த 1996ல் இலங்கை அணி உலக கோப்பை வென்றதை மறக்க முடியாது. தவிர, பல்வேறு சிறப்பான அணிகளுக்கு எதிராக, நாங்களும் அசத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளோம்.இவ்வாறு முரளிதரன் கூறினார்.--
