19:40
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி ஆன்டிகுவா நகரில் இன்று நடக்கவுள்ளது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இளம் இந்திய அணி காத்திருக்கிறது. சொந்த ஊரில் எழுச்சி கண்டு, ஆறுதல் வெற்றி பெற வெஸ்ட் இண்டீஸ் அணி தயாராக உள்ளது.வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள சுரேஷ் ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி கண்ட இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் நான்காவது போட்டி ஆன்டிகுவா நகரில் இன்று நடக்கவுள்ளது.
ரோகித் நம்பிக்கை:
இந்திய அணியின் துவக்க வீரராக பார்த்திவ் படேல் நம்பிக்கை அளிக்கிறார். ஆனால் ஷிகர் தவான் தொடர்ந்து ஏமாற்றி வருவது பின்னடைவு அளிக்கிறது. கடந்த போட்டியில் "டக்-அவுட்' ஆன விராத் கோஹ்லி இன்று எழுச்சி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பெரிய அளவில் சாதிக்காத தமிழக வீரர் பத்ரிநாத், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் நல்லது. கடந்த மூன்று போட்டிகளில் இரண்டு அரைசதம் உட்பட 161 ரன்கள் எடுத்துள்ள ரோகித் சர்மா, இன்றும் தனது அதிரடி ஆட்டத்தை தொடரலாம். இவருக்கு சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் இமாலய இலக்கை அடையலாம். கடந்த போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படாத மனோஜ் திவாரி, விரிதிமன் சகா உள்ளிட்டோர் இன்று களமிறக்கப்படலாம்.
முனாப் அபாரம்:
கடந்த மூன்று போட்டிகளில் எட்டு விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் முனாப் படேல், இன்றும் விக்கெட் வேட்டை நடத்தலாம். இவருக்கு பிரவீண் குமார் கைகொடுக்கும் பட்சத்தில் வேகத்தின் பலம் அதிகரித்து விடும். சுழலில் இதுவரை ஏழு விக்கெட் கைப்பற்றிய அமித் மிஸ்ரா நம்பிக்கை அளிக்கிறார். அனுபவ ஹர்பஜன் சிங், சுழலில் எழுச்சி கண்டால் நல்லது. இவர்களை தவிர சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான் உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்களும் துல்லியமாக பந்துவீசும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம். கடந்த போட்டிகளில் பங்கேற்காத அஷ்வின், இஷாந்த் சர்மா, வினய் குமார் உள்ளிட்டோருக்கு இன்று வாய்ப்பு வழங்கப்படலாம்.
சர்வான் எதிர்பார்ப்பு:
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் வரிசை பலவீனமாக உள்ளது. துவக்க வீரராக சிம்மன்ஸ் ஆறுதல் அளிக்கிறார். ஆனால் எட்வர்ட்ஸ் இதுவரை சொல்லிக் கொள்ளும் படி விளையாடாதது பின்னடைவான விஷயம். கடந்த மூன்று போட்டிகளில், இரண்டு அரைசதம் உட்பட 140 ரன்கள் எடுத்துள்ள அனுபவ சர்வான் இன்றும் கைகொடுக்கலாம். அதிரடி போலார்டு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில், உள்ளூர் ரசிகர்களை "சிக்சர்' மழையில் மகிழ்விக்கலாம். கடந்த போட்டியில் அதிரடியாக ரன் குவித்த ஆன்ட்ரி ரசல், இன்றும் தனது அபார ஆட்டத்தை தொடரலாம். இவருக்கு சாமுவேல்ஸ், கார்ல்டன் பாக் உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம்.
ஏமாற்றும் வேகம்:
வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேரன் சமி, ரவி ராம்பால் உள்ளிட்ட திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஆனால், போட்டியில் இவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியாதது ஏமாற்றமான விஷயம். போலார்டு, ரசல், கீமர் ரோச், டுவைன் பிராவோ உள்ளிட்ட வேகங்கள் சாதிக்கும் பட்சத்தில் விக்கெட் வேட்டை நடத்தலாம். சுழலில் தேவேந்திர பிஷு சிறப்பாக செயல்படுகிறார். இவருக்கு அந்தோனி மார்டின் ஒத்துழைப் அளித்தால் நல்லது.
"ஹாட்ரிக்' வெற்றி
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி ஆன்டிகுவா நகரில், நேற்று முன்தினம் நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் சுரேஷ் ரெய்னா, "பீல்டிங்' தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரசல் (92*), சிம்மன்ஸ் (45) உள்ளிட்டோர் கைகொடுக்க, 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்தது. பின் சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (86), பார்த்திவ் படேல் (46), ஹர்பஜன் (41), பிரவீண் (25*) உள்ளிட்டோர் கைகொடுத்தனர். இந்திய அணி 46.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, 3-0 என தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
