19:42

சர்வதேச கிரிக்கெட் அரங்கில், இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை இந்தியாவின் ஆதிக்கம் தொடரும்,'' என, புதிய பயிற்சியாளர் டன்கன் பிளட்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை இளம் இந்திய அணி 3-0 என கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. சச்சின், சேவக், தோனி, யுவராஜ், காம்பிர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில், கரீபிய மண்ணில் இளம் வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதுகுறித்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பிளட்சர் கூறியதாவது: இந்திய அணியில் திறமையான இளம் வீரர்கள் நிறைய உள்ளனர். இதனால் முன்னணி வீரர்கள் இல்லாத பட்சத்திலும் இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. சமீபகாலமாக டெஸ்ட், ஒருநாள், "டுவென்டி-20' என அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை இந்திய அணியில் ஆதிக்கம், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நீடிக்கும் என நம்புகிறேன்.வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரை போன்ற திறமையான வீரர்களுக்கு டெஸ்ட் அணியில் இடம் அளிக்க வேண்டும். ஆனால் தற்போதுள்ள டெஸ்ட் அணியில் திறமையான வீரர்கள் நிறைய இருப்பதால், இவருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இவர், விரைவில் டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பார் என நம்புகிறேன். இத்தொடரில், சுரேஷ் ரெய்னா கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார். இவருக்கு கிடைத்த இந்த அனுபவம், வரும் காலங்களில் இந்திய அணியின் கேப்டனாக சாதிக்க உதவும்.சமீபகாலமாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. அமித் மிஸ்ரா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு கைகொடுக்கின்றனர். ஹர்பஜன் சிங், பவுலிங்கில் மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக சதம் கடந்ததன்மூலம், தன்னை சிறந்த பேட்ஸ்மேனாக நிரூபித்தார். "லெக் ஸ்பின்னராக' அமித் மிஸ்ரா நம்பிக்கை அளிக்கிறார்.கடந்த மூன்று போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு பிளட்சர் கூறினார்.
