22:45
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று சானியா மிர்சா, சோம்தேவ் தேவ்வர்மன் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்களுக்கு எளிதானதாக அமைந்துள்ளது.கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் வரும் 20ம் தேதி துவங்குகிறது. இதற்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவுக்கு முதல் சுற்று எளிதானதாக அமைந்துள்ளது. டபிள்யு.டி.ஏ., ரேங்கிங் பட்டியலில் 60வது இடத்தில் உள்ள சானியா முதல் சுற்றில், 98வது இடத்தில் உள்ள பிரான்சின் விர்ஜினி ரசானோவை சந்திக்க உள்ளார். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் இரண்டாவது சுற்றில் உலகின் "நம்பர்-1' வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை சந்திக்க வேண்டியிருக்கும்.
இதேபோல ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஏ.டி.பி., ரேங்கிங்கில் 68வது இடத்தில் உள்ள இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், 110வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் டெனிஸ் கிரிமெல்மேயரை சந்திக்க உள்ளார். இதில் வெற்றி பெறும்பட்சத்தில் இரண்டாவது சுற்றில் ஜுயன் மொனாகோ (அர்ஜென்டினா) அல்லது ரஷ்யாவின் மிக்கேல் யோஸ்னியை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா (இந்தியா)-குரேஷி (பாகிஸ்தான்) உள்ளிட்ட ஜோடிகளுக்கு முதல் சுற்று எளிதானதாக அமைந்துள்ளது. இதேபோல பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடிக்கு முதல் சுற்று சுலபமாக அமைந்துள்ளது
.
