22:49
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.5 ஒருநாள் போட்டிக்கொண்ட தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. டோனி, தெண்டுல்கர், ஷேவாக், காம்பீர், ஜாகீர்கான், யுவராஜ்சிங் ஆகியோர் இல்லாமல் ரெய்னா தலைமையிலான இளம் அணி இந்த தொடரை வென்றது.
இந்திய- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ந்தேதி (திங்கட் கிழமை) தொடங்குகிறது. கேப்டன் டோனி, டிராவிட், லட்சுமண், முரளி விஜய், அபினவ் முகுந்த், அபிமன்யூ மிதுன், ஒஜா ஆகிய 7 வீரர்கள் டெஸ்ட் அணியில் இணைந்து கொள்கிறார்கள்.
ஒருநாள் போட்டியில் இடம் பெற்ற ரோகித்சர்மா, யூசுப்பதான், அஸ்வின், தவான், மனோஜ் திவாரி, வினய்குமார், விர்த்திமான் சகா ஆகியோர் நாடு திரும்புகிறார்கள்.
இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. கிறிஸ்கெய்லுக்கு அணியில் மீண்டும் இடம் கிடைக்க வில்லை. அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தையும், தேர்வு குழுவினரையும் கிறிஸ் கெய்ல் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அவர் அணியில் இருந்து நீக்கப் பட்டார். இதனால் கெய்ல் இந்தியாவில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் விளையாடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐ.பி.எல். போட்டியில் அவர் கதாநாயகனாக ஜொலித்தார்.
இதனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கெய்ல் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை தேர்வு குழுவினர் கண்டு கொள்ள வில்லை. முதல் 3 போட்டியில் தோற்று தொடரை இழந்த பிறகு கெய்லை அணியில் சேர்க்கவில்லை. ஒரு நாள் தொடர் முழுவதும் அவர் இடம் பெறவில்லை.
டெஸ்ட் அணியில் கெய்ல் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சு நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே அவர் டெஸ்ட் அணியிலும் இடம் பெறவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி அணியில் இருந்து ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிரேக் பிராத் வெய்ட்டுக்கு பதிலாக அட்ரியன் பரத் அணியில் சேர்க்கப்பட்டார்.
முதல் டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விவரம்:-
டாரன் சேமி (கேப்டன்), லெண்டில் சிம்மன்ஸ், எட்வர்ட்ஸ், டாரன் பிராவோ, சந்தர்பால், சர்வான், சாமுவேல்ஸ், ரவிராம்பால், கேமர் ரோச், பிரெண்டன் நாஷ், அப்ரியன் பரத், கால்டன் பவ், தேவேந்திர பிஷ¨.
