03:43
இலங்கை பிரீமியர் லீக் ”டுவென்டி 20” போட்டித் தொடரில் இந்திய வீரர்களை பங்கேற்க அனுமதிப்பதில்லை என்ற வாரிய முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்திய கிரிக்கட் வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாரிய தலைவர் சஷாங் மனோகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது பழைய முடிவு. இதில் மாற்றம் ஏதும் இல்லை. இன்று இதை அனுமதித்தால், நாளை வெஸ்ட் இண்டீசிலோ அல்லது ஜிம்பாப்வேயிலோ யாராவது ஒரு தனி நபர் போட்டித் தொடரை நடத்தலாம். அதற்கும் நமது வீரர்களை அனுப்பக் கோருவார்கள். எனவே இலங்கை தொடரில் இந்திய வீர்ரகளை பங்கேற்க அனுமதிக்க முடியாது என்ற முடிவு இறுதியானது, உறுதியானது.
இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளை நடத்தும் ஒப்பந்தம் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை இலங்கை கிரிக்கட் வாரியம் நடத்தவில்லை. எனவே இது அதிகாரப்பூர்வ போட்டி அல்ல, ஒரு தனியார் நிறுவனத்தின் போட்டித் தொடர்.
ஆனால் ஐபிஎல் எனப்படும் இந்திய பிரீமியர் லீக் போட்டிகள் வேறு. அவை சர்வதேச கிரிக்கட் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டவை. இந்திய கிரிக்கட் வாரியமே அதை நடத்துகிறது. இது தனியார் நிகழ்ச்சி அல்ல என்றார் மனோகர்.
