20:52
"வெஸ்ட்இண்டீஸ் சென்ற மூன்று நாட்களில், தட்பவெப்பநிலையை சாமாளித்து, விளையாடுவது மிகவும் கடினமாக இருந்தது,'' என, இந்திய வீரர் டிராவிட் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதனிடையே கிங்ஸ்டன் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அனுபவ வீரர் டிராவிட் சதம் அடித்து அசத்தினார்.
இது குறித்து டிராவிட் கூறியது:
டெஸ்ட் போட்டியில் பங்கேற்று ஏழு மாதங்கள் ஆயிற்று. இப்போது இங்கு வந்து மூன்று நாட்கள் தான் ஆகிறது. இங்குள்ள சூழ்நிலைக்கு மாறுவதற்கு மிகவும் கடினமாக உள்ளது. கடும் வெயில் காரணமாக, விரைவில் சோர்வடைந்து விடுகிறேன். இந்நிலையில் போட்டிக்காக, காலையில் விரைவாக எழுந்திருப்பது சிரமமாக உள்ளது.
நீண்ட நேரம் களத்தில் நிற்பதற்கு தேவையான பயிற்சியில் ஈடுபட்டால் தான், டெஸ்ட்டில் சிறப்பாக விளையாட முடியும். இதை சரியாக செய்வதால் தான் தொடர்ந்து சிறப்பாக செயலாற்ற முடிகிறது.
வெஸ்ட் இண்டீஸ்0 டெஸ்ட் தொடரை பெரிய போட்டியாக பார்க்கிறேன். இதில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். அடுத்த தலைமுறை வீரர்களான விராத் கோஹ்லி, ரெய்னா இருவரும் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்கள் எப்போதும் தங்கள் பாணியிலேயே செயல்படுவது தான் நல்லது. சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க நன்கு கற்று கொள்ள வேண்டும். துவக்கத்தில் கடினமாக இருந்தாலும், நாளைடைவில் எளிதாக அமைந்து விடும்.
கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கிறேன். மேலும் எனது மனதை அமைதியாக வைத்து கொள்வதால் தான் போட்டியில் முழுக்கவனத்துடன் செயல்பட முடிகிறது. பேட்டிங் செய்ய களமிறங்கியவுடன், எப்போதும் முதல் இரண்டு பந்துகளில் ரன் எடுக்காமல் இருப்பேன்.
அப்போது தான், மூன்றாவது பந்தை பவுலர்கள் நமக்கு சாதகமாக வீச வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பந்தை பவுண்டரிக்கு விரட்டலாம். கிங்ஸ்டன் ஆடுகளம் சுழல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. சரியான முறையில் பந்துவீசினால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம். இவ்வாறு டிராவிட் கூறினார்.
தூக்கம் வரவில்லை
போட்டி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் சமி கூறுகையில்,"" மூன்றாம் ஆட்டத்தில் டிராவிட், 6 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை நழுவ விட்டேன். ஒருவேளை அதை பிடித்திருந்தால், இந்திய அணி அதிக முன்னிலை பெற்றிருக்காது. இதை நினைத்து அன்று இரவு முழுவதும், தூக்கமே வரவில்லை,'' என்றார்.
