20:49
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு, "லியுடெனன்ட் கலோனல்' விருது வழங்க, ஜார்க்கண்ட் முதல்வர் அர்ஜுன் முண்டா பரிந்துரை செய்துள்ளார்.
விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு, இந்திய ராணுவத்தின் சார்பில் கவுரவ விருதுகள் வழங்கப்படுகிறது. 2008ல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு, "டெரிட்டோரியல் ஆர்மி' என்ற கவுரவ விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், விமானப்படை சார்பில் "குரூப் கேப்டன்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். இந்த வரிசையில் இப்போது தோனியும் இணையவுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் "செல்லப் பிள்ளையாக' இருக்கும் தோனி, ஏற்கனவே ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் மாநிலத்தில் புலி பாதுகாப்பு இயக்கத்தின் தூதுவராக உள்ளார். தவிர, தனிநபரில் அதிகபட்ச வருமான வரி செலுத்திவரும் இவரை, வருமான வரித்துறையின் தூதுவராக நியமிக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. விரைவில், கிரிக்கெட் அகாடமி துவங்கும் எண்ணத்தில் உள்ள தோனிக்கு, தேவையான நிலம் ஒதுக்க இருப்பதாக, கடந்த ஏப்ரலில் துணை முதல்வர் சுதேஷ் மகடோ அறிவித்துள்ளார். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா, மத்திய பாதுகாப்பு துறைக்கு எழுதிய கடிதத்தில்,"அணியை திறம்பட வழிநடத்தும் தோனி, இந்தியாவுக்கு இரண்டாவது உலக கோப்பை வென்று தந்தார். இவருக்கு ராணுவத்தின் "லியுடெனன்ட் கலோனெல்' என்ற கவுரவ விருது வழங்கவேண்டும்,' என, பரிந்துரை செய்துள்ளார்.

