20:31
இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க ஊக்க மருந்து பயன்படுத்தினார் என சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குத்துச்சண்டை வீரர் மஞ்சு வன்னியாரச்சி ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட போது, அவரிடமும் அவரது மருத்துவரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக அனுரகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேபோன்று உபுல் தரங்க மற்றும் அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் எலியன்த வைட் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வீரர் மற்றும் அவரது மருத்துவரிடம் விசாரணை நடத்துவது வழமையான நடைமுறையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எலியன்த வைட் என்ற குறித்த மருத்துவர் காலையிலும் மாலையிலும் அலரி மாளிகையில் சேவையாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த நபருக்கு இலங்கையில் மருத்துவ நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான எந்தவொரு தகுதியும் கிடையாது எனவும், மருத்துவர் சங்கத்தில் பதிவு செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உபுல் தரங்கவிற்கு எதிராக இரண்டாண்டுகால போட்டித் தடை விதிக்கப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
