06:30
அணி நிர்வாகத்திலும், வாரியச் செயல்பாடுகளிலும் முன்னேற்றம் விரைவில் ஏற்படும் என்று பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கட் அணியின் முன்னாள் கப்டன் ஷாகித் அப்ரிதி தெரிவித்துள்ளார்.
வாரியத்தின் செயல்பாடுகளை பொறுத்து தானும் விரைவில் சர்வதேச கிரிக்கட்டிற்குத் திரும்புவேன் என்று மேலும் தெரிவித்தார். இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கட் அணியான ஹாம்ப்ஷயர் அணிக்கு விளையாடச் சென்றுள்ள அப்ரிதி தனது சர்வதேச கிரிக்கட் இன்னமும் முடிந்து விடவில்லை என்று கூறினார்.
ஹாம்ப்ஷயர் அணிக்கு விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கு சென்று விளையாடினாலும் ஒரு பாகிஸ்தான் கிரிக்கட் வீரராகவே நான் அங்கீகரிக்கப்படுகிறேன் எனவே நான் அங்கு நன்றாக விளையாடினால் அது பாகிஸ்தான் கிரிக்கட்டிற்குத்தான் பெருமை சேர்க்கும்.
நான் பாகிஸ்தானுக்கு மீண்டும் விளையாட விரும்புகிறேன். நான் இன்று இருக்கிறேன் என்றால் அது பாகிஸ்தானால் தான். என்னுடைய அடையாளம் என்பது பாகிஸ்தான் வீரர் என்பதில் தான் உள்ளது. அதனை விட எனக்கு வேறொன்றும் பெரிது கிடையாது.
எப்போது நிலைமைகள் முன்னேற்றம் அடைகிறதோ நான் மீண்டும் விளையாடுவேன். அதுவரை நிலைமைகள் சரியில்லை என்று பொருள் என்று கூறினார் அப்ரிதி.
