22:07
பி.சி.சி.ஐ., யிடம் மீண்டும் ஒரு முறை ஐ.சி.சி., பணிந்துள்ளது. அம்பயர் மறுபரிசீலனை முறையில் (டி.ஆர்.எஸ்.,) மாற்றங்கள் செய்ய ஐ.சி.சி., முன் வந்துள்ளது.
டி.ஆர்.எஸ்., முறைக்கு துவக்கத்தில் இருந்தே, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எல்.பி.டபிள்யு., "அவுட்' கொடுக்க பயன்படுத்தப்படும், "பால் டிராக்கர்' முறையில் நம்பகத்தன்மை இல்லை. தவிர, "ஹாட் ஸ்பாட்', "ஸ்னிக்கோ மீட்டர்' முறையையும் சேர்த்து தான் "டி.ஆர்.எஸ்., இருக்க வேண்டும்,'' என, வலியுறுத்தியது.
இதுகுறித்து தற்போது நடந்து வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முடிவில், பி.சி.சி.ஐ., கோரிக்கைக்கு ஐ.சி.சி., பணிந்துள்ளது. இதன் படி எடுக்கப்படவுள்ள புதிய முடிவுகள்:
* டி.ஆர்.எஸ்., முறையில் தற்போது பயன்படுத்தப்படும், "பால் டிராக்கர்' முறையை நீக்கப்படும்.
* இதனால், "பால் டிராக்கர்' முறையில், இனி "எல்.பி.டபிள்யு.,' அவுட் வழங்கப்பட மாட்டாது. களத்தில் இருக்கும் அம்பயர் மட்டுமே, எல்.பி.டபிள்யு., அவுட் தருவார்.
* "ஹாட் ஸ்பாட்' மற்றும் "ஸ்னிக்கோ மீட்டர்' முறை, புதியதாக சேர்க்கப்படுகிறது.
* இதன் மூலம் சந்தேகத்துக்கு இடமான "கேட்ச்', பந்து பேட்டில் பட்டதா இல்லையா என்பதை தெளிவாக கண்டறியலாம்.
புதிய முறை குறித்து ஐ.சி.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:
கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக தொழில்நுட்ப முறைகளுக்கு பி.சி.சி.ஐ., எப்போதும் வரவேற்பு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள டி.ஆர்.எஸ்., முறையை அவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. அதேநேரம் இன்பிராரெட் கேமரா மற்றும் சப்தங்களை அறிய உதவும் "ஹாட் ஸ்பாட்', "ஸ்னிக்கோ மீட்டருடன்' கூடிய புதிய "டி.ஆர்.எஸ்., முறைக்கு பி.சி.சி.ஐ., வரவேற்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், இரு நாடுகள் சம்மதித்துக் கொண்டால் "பால் டிராக்கர்' முறை பயன்படுத்தலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 2008க்குப் பின், எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், டி.ஆர்.எஸ்., முறையை பயன்படுத்த பி.சி.சி.ஐ., சம்மதித்துள்ளது.
---
