13:35
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முனாப் படேல் வேகமாகப் பந்து வீசுவதில்லை ஒரு சுழற்பந்து வீச்சாளரை போல அவர் பந்து வீசி வருகிறார் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஆண்டி ரோபர்ட்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரே சீராக பந்து வீசுவதில்லை. ஆரம்பத்தில் வேகமாக பந்து வீசுகிறார்கள். ஆனால் போகப் போக வேகத்தைக் குறைத்து சுழற்பந்து வீச்சாளர்கள் போல போடுகிறார்கள். இதற்கு சரியான உதாரணம் முனாப் படேல்.
2006 ம் ஆண்டு அவர் அறிமுகமான போது அவரிடம் நல்ல வேகம் இருந்தது. ஆனால் இப்போது அவர் சுழற்பந்து வீச்சாளர் போல போடுகிறார். உள்ளூரில் விளையாடும் வரை நன்றாக விளையாடுகிறார்கள். ஆனால் சர்வதேச போட்டிகளுக்கு மாறிய பின்னர் வேகத்தைத் தணித்து விடுகிறார்கள். இந்த அணுகுமுறை சரியானதாக இருக்காது.
ஒரு பந்துவீச்சு பயிற்சியாளரால் பந்தை எப்படி நேராகவும், சரியாகவும் வீச வேண்டும் என்பதைத்தான் கற்றுத் தர முடியும். மற்றபடி ஒரு பந்து வீச்சாளரின் இயல்பை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் இதுபோல சீரான வேகத்தை பராமரிக்காமல் விட்டு விட்டால் அது அந்தப் பந்து வீச்சாளரின் திறனைக் குறைத்து விடும் வாய்ப்புள்ளது.
தற்போதைய கிரிக்கட்டில், எந்த அணியிலுமே சிறப்பான வேகப்பந்து வீச்சாளர் இல்லை என்பது எனது கருத்து. ஷான் டெய்ட்டிடம் சில குறைகள் உள்ளன. நான் அதிகம் நேசிக்கும் டேன் ஸ்டெயினும் கூட சில நேரங்களில் தவறு செய்கிறார். வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து கூற பெரிதாக எதுவும் இல்லை. கெமர் ரூச், ஜெரோம் டெய்லர், பிடல் எட்வர்ட்ஸ் ஆகியோர் பெரிய அளவில் இன்னும் விஸ்வரூபம் எடுக்கவில்லை.
கர்ட்லி அம்புரோஸ் கூட மெதுவாகத்தான் ஓடி வருவார். ஆனால் பந்தை வீசும்போது அது அதிவேகமாக இருக்கும். காரணம் அவரது உடல் பலம். ஆனால் இப்போது எந்தப் பந்து வீச்சாளரிடமும் அந்த அளவுக்கு திறன் கிடையாது. எனவே அவர்கள் வேகமாக ஓடினால் தான் பந்தையும் வேகமாக வீச முடியும் என்றார் அவர்.
கிரிக்கட் உலகம் கண்ட மிகப் பெரிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரோபர்ட்ஸ். ஒருகாலத்தில் உலகையே குலுங்க வைத்த அதிவேக வெஸ்ட் இண்டீஸ் அணியி்ன் நான்கு மின்னல் வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
