22:18
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிப்படைந்தது.
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட், சவுத்தாம்படன் நகரில் நேற்று துவங்கியது. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் "பீல்டிங்' தேர்வு செய்தார்.சங்ககரா கேப்டன்:கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை கேப்டன் தில்ஷன், மூன்றாவது டெஸ்டில் பங்கேற்கவில்லை. இவருக்கு பதிலாக சங்ககரா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அறிமுக வீரராக லஹிரு திரிமன்னே களமிறக்கப்பட்டார். லார்ட்ஸ் டெஸ்டில், காயம் காரணமாக விளையாடாத இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், நேற்று களமிறங்கினார்.மழை குறுக்கீடு:மழை காரணமாக நேற்றைய முதல் நாள் ஆட்டம் தாமதமாக துவங்கியது. முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு அறிமுக வீரரான லஹிரு திரிமன்னே (10) ஏமாற்றம் அளித்தார். இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 23 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.சங்ககரா ஏமாற்றம்:பின், மீண்டும் ஆட்டம் துவங்கியது. டிரம்லட் வேகத்தில் பரணவிதனா (11) எல்.பி.டபிள்யு., முறையில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சங்ககரா (2), ஆண்டர்சன் வேகத்தில் நடையை கட்டினார். இலங்கை அணி தேநீர் இடைவேளையின் போது 3 விக்கெட்டுக்கு 29 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. மகிளா ஜெயவர்தனா (3) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 2, டிரம்லட் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

