22:18
"பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில், கோப்பை வெல்ல முடியவில்லை என்றாலும், பைனல் வரை முன்னேறியது திருப்தியாக உள்ளது,'' என இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் பெண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடி, செக் குடியரசின் ஆன்டிரியா, லூசி ஜோடியிடம் 4-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
இது குறித்து சானியா மிர்சா கூறியது:
எப்போது தோல்வி அடைந்தாலும், அது தோல்வி தான். துவக்கத்தில் இது மிகுந்த வேதனையை கொடுக்கும். அதேநேரம் எனது டென்னிஸ் வாழ்க்கையை திரும்பிக் பார்க்கும் போது, பிரெஞ்ச் ஓபனில் எனது இந்த சாதனை பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
பைனலின் போது காற்று அதிகமாக வீசியது. இருப்பினும், அதையும் மீறி சிறப்பாக விளையாட வேண்டும். அப்போது தான் வெற்றிபெற முடியும். இதில் எங்களை விட செக் குடியரசு ஜோடி சிறப்பாக விளையாடியதால் கோப்பை வென்றனர்.
இதுவரை என்னுடன் இணைந்து விளையாடியவர்களில், எலினா தான் சிறப்பானாவர். டென்னிசில் நாங்கள் இருவரும், ஆரம்ப காலம் முதலே நல்ல நண்பர்கள். எங்கள் இடையே நல்ல அணுகுமுறை உள்ளது. இதனால் தான் எங்களால் சிறப்பாக செயலாற்ற முடிந்தது.
கடந்த 2008 ம் ஆண்டில் இருந்து கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்றுக்கு மேல் முன்னேறியது இல்லை. இதுகுறித்து அதிக கவலைப்படுவதில்லை. ஏனெனில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன் போன்ற தொடர்களில் சிறப்பான வீராங்கனைகளிடம் தான் தோல்வி அடைந்துள்ளேன்.
விம்பிள்டனில் சாதிப்பேன்:
அடுத்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலும், என்னால் முடிந்தளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். தவிர, இன்னும் சில மாதங்களில் ஒற்றையர் பிரிவு தரவரிசை பட்டியலில், "டாப்-50' இடத்துக்குள் வர முயற்சிப்பேன். இவ்வாறு சானியா மிர்சா கூறினார்.
