22:21
பிரெஞ்ச் ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவில், முதன் முறையாக சீனாவின் நா லீ சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார். கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முதல் ஆசிய வீராங்கனை நா லீ ஆவார்.பாரிசில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பைனலில் "நடப்பு சாம்பியன்' இத்தாலியின் பிரான்செஸ்கா ஷியாவோனே, சீனாவின் நா லீயை சந்தித்தார்.
துவக்கத்தில் இருந்தே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நா லீ, முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் ஷியாவோனே பதிலடி தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் "டை பிரேக்கர்' வரை நீடித்த இந்த செட்டையும், நா லீ தன்வசப்படுத்தினார். இறுதியில் 6-4, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சீனாவின் நா லீ, முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
வெல்வாரா நடால்:
இன்று நடக்கும் ஆண்கள் ஒற்றையர் பைனலில் உலகின் "நம்பர்-1' வீரர் மற்றும் "நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் நடால், தரவரிசையில் 3வது இடத்திலுள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை எதிர்கொள்கின்றார்.
நடாலுக்கு சாதகம்:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரை பொறுத்தவரையில், நடால் தான் கதாநாயகன். களிமண் தரையில் நடத்தப்படும், இத்தொடரில் இதுவரை நடால், கடந்த 2005 முதல் 2008, 2010 என மொத்தம் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த 2009ல் மட்டும் தான் காயம் காரணமாக பங்கேற்கவில்லை.
தவிர, கடந்த 2006, 2007, 2008 தொடர் பைனலில் நடால், ரோஜர் பெடரரை வீழ்த்தி தான் கோப்பை வென்றார். இதனால் இம்முறையும் பெடரரை எப்படியும் வீழ்த்தி, ஆறாவது முறையாக கோப்பை வெல்வது உறுதி என்று நம்பப்படுகிறது. ஏனெனில், பிரெஞ்ச் ஓபன் தொடர் பைனலில் நடால் இதுவரை தோல்வியடைந்தது இல்லை.
பெடரர் வெல்வாரா?
பெடரர் இதுவரை 16 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றிருந்தாலும், பிரெஞ்ச் ஓபன் பட்டம், இவருக்கு அவ்வளவு எளிதாக கிடைத்தது இல்லை. இதுவரை நான்கு முறை பைனலுக்கு முன்னேறினாலும், ஒரு முறை தான் கோப்பை வென்றார். ஐந்தாவது முறையாக பைனலுக்கு தகுதிபெற்ற இவர், நடாலை வீழ்த்துவது என்பது எளிதான காரியமல்ல.
---
