21:09
இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் புகழ்பெற்ற வீரர்கள் தெண்டுல்கர், கேப்டன் டோனி. தெண்டுல்கர் டெஸ்டில் அதிக ரன், அதிக சதம், ஒரு நாள் போட்டியில் அதிக ரன், சதம், ஒரு ஆட்டத்தில் 200 ரன் என்பது உள்பட பல்வேறு சாதனைகளை குவித்துள்ளார்.டோனி தனது சிறப்பான கேப்டன் ஷிப் மூலம் அணிக்கு பெருமை சேர்த்து வருகிறார். புகழின் உச்சத்தில் இருக்கும் இவர்கள் விளம்பரம் மூலமும் கோடிக் கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள்.
கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்படும் தெண்டுல்கர், டோனி ஆகியோருக்கு போஜ்பூரி மொழி நடிகரான மனோஜ் திவாரி கோவில் கட்டுகிறார். இதை அவரே நிருபர்களிடம் தெரிவித்தார். தனது சொந்த ஊரான பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் அதர்வாலியா கிராமத்தில் அவர் தெண்டுல்கர், டோனிக்கு கோவில் கட்டுகிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெண்டுல்கரும், டோனியும் மிகுந்த உற்சாகத்தை அளித்து வருகிறார்கள். அவர்கள் கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்படுகிறார்கள். இதனால் இருவருக்கும் ரூ.3 கோடி செலவில் கோவில் கட்ட முடிவு செய்துள்ளேன். இதற்காக இடம் கண்டறியப்பட்டுள்ளது இந்த கோவிலில் இருவரது சிலைகள் இருக்கும்.
2011-ம் ஆண்டு உலககோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்கள் படம் ஆயில் பெயிண்டால் கோவிலில் வரையப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
