
ஐ.சி.சி. டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியில் கபில்தேவ், கவாஸ்கர், சச்சின், சேவாக் உள்ளிட்ட நான்கு இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 21 ம் திகதி துவங்கும் டெஸ்ட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இது 2,000 வது டெஸ்ட் போட்டி. இந்த மகத்தான மைல்கல்லை கவுரவிக்கும் விதமாக சர்வதேச வீரர்கள் அடங்கிய கனவு டெஸ்ட் அணியை ஐ.சி.சி. தெரிவு செய்ய திட்டமிட்டது. இதற்காக பரிந்துரை செய்யப்பட்ட 60 வீரர்களின் பட்டியலை சர்வதேச கிரிக்கட் கவுன்சில் (ஐ.சி.சி.) சமீபத்தில் வெளியிட்டது.
இதில் 2 துவக்க வீரர்கள், 3 ”மிடில் ஓர்டர்” துடுப்பாட்ட வீரர்கள், ஒரு விக்கெட் கீப்பர், ஒரு ”ஆல்ரவுண்டர்”, 3 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என 11 வீரர்களை, ஐ.சி.சி. இணையதளம் மூலமாக ரசிகர்கள் தெரிவு செய்தனர். இதில் அதிகபட்சமாக இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா சார்பில் தலா நான்கு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் இரண்டு வீரர்களும், பாகிஸ்தான் சார்பில் ஒருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
துவக்க வீரர்களாக சேவாக், கவாஸ்கர் உள்ளிட்ட இந்திய வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ”மிடில் ஓர்டர்” துடுப்பாட்ட வீரர்களாக சாதனை வீரர் சச்சின், அவுஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன், வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா உள்ளிட்டோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ”ஆல்ரவுண்டர்” பிரிவில் கபில்தேவ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் பிரிவில் அவுஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக வெஸ்ட் இண்டீசின் அம்புரோஸ், அவுஸ்திரேலியாவின் மெக்ராத், பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.சி.சி. கனவு டெஸ்ட் அணி: சேவாக், கவாஸ்கர், பிராட்மேன், சச்சின், லாரா, கபில்தேவ், கில்கிறிஸ்ட், வார்ன், அக்ரம், அம்புரோஸ், மெக்ராத்.