

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி “பி” பிரிவில் உள்ளது. அந்த பிரிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த அணிகளுடன் சென்னை தலா 2 முறை மோத வேண்டும். “ஏ” பிரிவில் உள்ள 5 அணிகளில் புனே வாரியர்சுடன் நாளை இரண்டாவது முறையாக மோதுகிறது. அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளான மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். சென்னை அணி இதுவரை 6 ஆட்டத்தில் விளையாடிவிட்டது. இதில் 3 வெற்றி, 3தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று உள்ளது. ரன்ரேட்டில் முன்னிலை வகிப்பதால் 4-வது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 7-வது ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியை நாளை (புதன்கிழமை) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் நவிமும்பையில் மாலை 4 மணிக்கு நடக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் தான் 3 வெற்றியையும் பெற்றது. இதனால் வெளி மைதானத்தில் முதல் வெற்றியை பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் புனே வாரியர்ஸ் நேற்று நடந்த ஆட்டத்தில் தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடும். அந்த அணி தொடர்ந்து 3 தோல்வியை சந்தித்து உள்ளது. இதனால் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளையாடும்.
நாளை நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் கொச்சி-டெக்கான் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு கொச்சியில் இந்த ஆட்டம் நடக்கிறது. கொச்சி அணி 4-வது வெற்றிக்காகவும், டெக்கான் அணி 3-வது வெற்றிக்காகவும் போராடும்.