
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோவிக், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில், கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா (ரேங்கிங் நம்பர் 72), ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பாரோயிசை எதிர்கொண்டார்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியா 6-3, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக (2007, 2011) இத்தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் இத்தாலியின் பிரான்சஸ்கா ஷியவோனே, அமெரிக்காவின் மெலானி ஓடினை சந்தித்தார். இதில் ஷியவோனே 6-2, 6-0 என்ற நேர் செட்கணக்கில் மிகச் சுலபமாக வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற போட்டிகளில் ரஷ்யாவின் ஸ்வொனரேவா, சுலோவேகியாவின் ஹண்டுசோவா, அவுஸ்திரேலியாவின் அனஸ்டாசியா ரோடியோனோவா, இத்தாலியின் ரோபர்டா வின்சி, சாரா இரானி உள்ளிட்டோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தனர்.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் பெலிசியானோ லோபெஸை சந்தித்தார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பெடரர் 6-3, 6-4, 7-6 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, 2 வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோவிக், நெதர்லாந்தின் திமோ டி பக்கரை சந்தித்தார். இதில் ஜோவிக் 6-2, 6-1, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அர்ஜென்டினாவின் ஜுயன் மார்டின் டெல் போட்ரோ 6-7, 6-3, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் இவோ கார்லோவிச்சை வீழ்த்தினார்.