17:22

இங்கிலாந்துடனான அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட திடீர் தோல்வி குறித்து இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் திலகரட்ன தில்ஷான் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
எனினும் தான் ஆத்திரமடையவில்லை எனவும் சாந்தமாகவே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை முடிவுற்ற இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 24.4 ஓவர்களில் 82 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் இங்கிலாந்து ஓர் இன்னிங்ஸ் மற்றும் 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இதுகுறித்து இலங்கை அணித்தலைவர் தில்ஷான் கருத்துத் தெரிவிக்கையில்,
'சிறந்த துடுப்பாட்ட வரிசையைக் கொண்டுள்ள நாம் 25 ஓவர்களில் எப்படி ஆட்டமிழந்தோம் என்பதை நம்ப முடியாமலுள்ளது. உண்மையில் மிக மோசமான துடுப்பாட்டம் காரணமாகவே நாம் இப்போட்டியில் தோல்வியுற்றோம்' எனக் கூறியுள்ளார்.
'காலையில் (இயன்) பெல் சதம் குவித்தவுடன் அவர்கள் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொள்வர் என எம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன் பின் என்ன நடந்தது என்பதை என்னால் விளக்க முடியவில்லை' என தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் தில்ஷான்.
'எமது துடுப்பாட்ட வரிசையில் மஹேல, குமார், திலான், மற்றும் என்னைப் போன்ற வீரர்கள் உள்ளனர்.நாம் அனுபவமிக்க வீரர்கள். நாம் முடிந்தவரை விரைவாக மீண்டும் ஒன்றிணைந்து வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள அடுத்த டெஸ்ட் போட்டிக்கு திரும்ப வேண்டும்' என அவர் கூறியுள்ளார்.
