
ஐபிஎல் போட்டியில் புணே வாரியர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவா தலையா வென்ற புணே கேப்டன் யுவராஜ் சிங், சூப்பர் கிங்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார். முரளி விஜய், ஹசி ஆகியோர் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினர். முரளி விஜய் 31 ரன்கள் (29 பந்துகள்) சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா, ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். அவர் 2 ரன்களில் தாமஸ் பந்து வீச்சில் ஸ்டெம்புகளைக் பறி கொடுத்தார். ஆனால் மறுமுனையில் ஹசி சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார். தொடர்ந்து வந்த கேப்டன் தோனி ஹசியுடன் நின்று விளையாடினார்.
16.4 ஓவர்களில் சூப்பர் கிங்ஸ் அணி 118 ரன்கள் எடுத்திருந்தபோது, தோனி ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 26 ரன்களை எடுத்திருந்தார்.
சிறப்பாக ஆடி வந்த ஹசி அடுத்த ஓவரில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அவர் 48 பந்துகளில் 61 ரன்களை விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். அடுத்து வந்த மோர்கல் ரன் ஏதுமின்றி வெளியேறினார். கடைசி பந்தில் அனிருத் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பத்ரிநாத் ஒரு சிக்ஸரை விளாசி 11 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இருபது ஓவர்களின் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாட களம் இறங்கிய வாரியர்ஸ் அணி தொடக்கத்தில் இருந்த சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. மிஸ்ரா 9 ரன்கள், ரைடர் 15 ரன்கள், பாண்டே 12 ரன்கள், உத்தப்பா ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து வீழ்ந்தனர். இதனால் சென்னை வீரர்கள் உற்சாகமடைந்தனர்.
கேப்டன் யுவராஜ் சிங், மன்ஹாஸ் ஆகியோர் ஒரளவு நிலைத்து நின்று ரன் சேர்த்து சென்னை ரசிகர்களுக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தினர்.
ஆனால் போலிங்கர் மன்ஹாûஸ அவுட் ஆக்கினார். இதனால் வெற்றி சூப்பர் கிங்ஸ் அணியை நோக்கி திரும்பியது. நிலைத்து நின்று ஆடிய யுவராஜ் 34 ரன்களில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் சர்மா, டெய்லர் ஆகியோர் அடுத்தடுத்து ரன் அவுட் ஆனார்கள். இறுதியில் மெக்கல்லம் 15 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதனால் வாரியர்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சூப்பர் கிங்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது 3-வது வெற்றி. இதுவரை ஆடிய 6 போட்டிகளில் மூன்றில் அந்த அணி தோல்வியடைந்துள்ளது. சென்னை அணியின் மூன்று வெற்றிகளும் சென்னையில் ஆடிய போது கிடைத்தவைதான். புணே வாரியர்ஸ் 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளைப் பெற்றுள்ளது. இதே இரு அணிகள் புதன்கிழமை மீண்டும் மோதவுள்ளன.