22:32
சண்டீகர் மொஹாலி விளையாட்டரங்கில் நடைபெற்ற இப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை பெற்றது.
பின்னர் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி கண்டது.
முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் சச்சின், பஞ்சாப் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த வல்தாட்டி 14, கில்கிறிஸ்ட் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கலாக 28 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர்.
ஆனால் 3ஆவதாக இணைச் சேர்ந்த மார்{ம், தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தினர். கார்த்திக் 24 பந்துகளில் 31 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். மார்ஷ் 34 பந்துகளில் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கார்த்திக் ஒரு சிக்ஸரும், 4 பவுண்டரிகளும் விளாசினார். பின்னர் வந்தவர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். முனாப் படேல் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். மாலிங்க 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் கடினமான இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. ஆரம்பத்திலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சச்சின் 6, ரோஹித் சர்மா 5 ஓட்டங்களுடன் வீழ்ந்தனர். மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பிளிஸ்ஸர்ட் 15, கெய்கரன் பொலார்ட் 17 ஓட்டங்களையும் பெற்றனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராயுடு 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் வீரர் பட் பந்துவீச்சில் இறுதி 4 விக்கெட்டுகளும் சரிந்தன. இதனால் அந்த அணி 87 ஓட்டங்குளுக்கு அனைத்து விக்கெட்டகளையும் இழந்து தோல்வியை தழுவியது. 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பார்கவ் பட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
பிரவீண்குமார் 2 விக்கெட்டுகளும், பிபுல் சர்மா, ஹாரிஸ், ஸ்ரீவத்சவா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
