

இங்கிலாந்து செல்ல உள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரில் (ஜூலை 21-ஆக.,18) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஜூலை 21ம் தேதி, லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. இத்தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை, ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக் குழுவினர், நேற்று தேர்வு செய்தனர்.
திரும்பிய சீனியர்கள்:
கேப்டன் தோனியுடன், வெஸ்ட்இண்டீஸ் தொடரில் இடம் பெறாத "சீனியர்கள்' சச்சின், ஜாகிர் கான் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளனர். காம்பிருக்கு துணைக் கேப்டன் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதிரடி துவக்க வீரர் சேவக், அணியில் இடம் பெற்றாலும், முதல் டெஸ்டில் விளையாட மாட்டார்.
கோஹ்லி நீக்கம்:
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சோபிக்காத, துவக்க வீரர் தமிழகத்தின் முரளி விஜய், விராத் கோஹ்லி நீக்கப்பட்டுள்ளனர். மற்றொரு துவக்கவீரர் அபினவ் முகுந்த் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டில், அடுத்தடுத்து அரை சதம் அடித்துள்ள ரெய்னா, "மிடில் ஆர்டர்' இடத்தை தட்டிச் சென்றுள்ளார். யுவராஜ் சிங் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெற்றார். இரண்டாவது விக்கெட் வாய்ப்பு, பார்த்திவ் படேலிடம் இருந்து பறிக்கப்பட்டு, சகாவுக்கு வழங்கப்பட்டது.
ஐந்து வேகம்:
இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும். இதனால் ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, பிரவீண் குமார் ஆகியோருடன், முனாப் படேல், ஸ்ரீசாந்துக்கும் இடம் கிடைத்துள்ளது. அபிமன்யு மிதுன் நாடு திரும்புகிறார். சுழலில் வழக்கம் போல ஹர்பஜன் சிங்குடன், அமித் மிஸ்ரா தேர்வாகி உள்ளார்.
அணி விவரம்:
தோனி (கேப்டன்), காம்பிர் (துணைக் கேப்டன்), சேவக், அபினவ் முகுந்த், டிராவிட், சச்சின், லட்சுமண், ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், ஸ்ரீசாந்த், பிரவீண் குமார், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, முனாப் படேல் மற்றும் சகா.