01:39
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான அப்ரிடி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இந்த நடவடிக்கையை எடுத்தது. இதையடுத்து கிரிக்கெட் வாரியத்தை அப்ரிடி கடுமையாக விமர்சித்தார். மேலும் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் அறிவித்தார்.இதனால் அப்ரிடிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கும் இடையே மோதல் முற்றுகிறது. அப்ரிடிக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தது. அதோடு அவருடனான ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது. மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு செய்தது.
இதையடுத்து அப்ரிடி நாளை 8-ந்தேதி 3 நபர்கள் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியது. ஆனால் அப்ரிடி ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஆஜராக மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அப்ரிடியின் வக்கீல் சையத் அலி கபார் கூறுகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் இதில் சரியான விதியை கடைப்பிடிக்கவில்லை, தனி நபருக்கு பாகிஸ்தான் வழங்கியுள்ள உரிமையை பாதிப்பதாக உள்ளது என்றார்.
ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கூறுகையில், அப்ரிடி ஓய்வு பெறுவதாக தன்னிச்சையாக அறிவித்துள்ளார். இது வீரர்களின் நடத்தை மீறிய செயலாகும். இதற்காகவே அவருடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதுÓ என்றார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் விவகாரங்களில் அரசியல் தலையீடு உள்ளது. என்றாலும் அப்ரிடி மீதான ஒழுங்கு நடவடிக்கையை யாராலும் தடுக்க முடியாது என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
