
அமெரிக்கா டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் ஒரு ஆண்டிற்கு பின்னர் ஒரு டென்னிஸ் போட்டியில் சாம்பியன் ஆகி உள்ளார்.
அவர் ஸ்டான் போர்டு கிளாசிக் டென்னிஸ் இறுதிப்போட்டியில் நேற்று 3 வது நிலை வீராங்கனையாக மரியோன் பர்டோலியை ( பிரான்ஸ்) 7-5, 6-1 செட் கணக்கில் வென்று சாம்பியன் வறட்சியை போக்கி உள்ளார்.
துவக்க செட்டில் 2-4 என்ற பின்னடைவில் இருந்த செரினா வில்லியம்ஸ், பின்னர் அதிரடியாக ஆடி வெற்றி பெற்றார். கடுமையான கிரவுண்ட் ஸ்டிரோக்குகளால் பர்டோலியை திணற அடித்த செரினா சாம்பியன் ஆனார்.
செரினா வில்லியம் 13 முறை கிராண்ட்சிலாம் போட்டியில் சாம்பியன் ஆனவர். உடல் நலக்குறைவு மற்றும் காயம் காரணமாக ஒரு ஆண்டுக்கு பின்னர், ஜீன் மாதம் மீண்டும் அவர் ஆடுகளத்திற்கு வந்தார்.
செரினா வில்லியம்ஸ் சொந்த அமெரிக்க மண்ணில், நடந்த போட்டியில் ரசிகர்களை ஏமாற்றாமல் வெற்றி பெற்றார். 2008 ம் ஆண்டு யு.எஸ். ஒபனில் செரினா வில்லியம்ஸ் சாம்பியன் ஆனார். அதன் பின்னர் தற்போது தனது சொந்த அமெரிக்க மண்ணில் ஸ்டான் போர்டு கிளாசிக் டென்னிசில் சாம்பியன் ஆகி உள்ளார். இந்த இறுதிப் போட்டி 1 மணி 23 நிமிடம் நடந்தது.