
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் அபினவ் முகுந்த், லட்சுமண் உள்ளிட்டோர் அரைசதம் அடித்து கைகொடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் டொமினிகாவில் நடக்கிறது.
இஷாந்த் மிரட்டல்:
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கார்ல்டன் பாக் (60), டேரன் பிராவோ (50) கைகொடுக்க, முதல் இன்னிங்சில் 204 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5, பிரவீண் குமார், ஹர்பஜன் சிங் தலா 2, முனாப் படேல் ஒரு விக்கெட் கைப்பற்றினர். பின், முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்த போது, மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அபினவ் முகுந்த் (6), முரளி விஜய் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
டிராவிட் ஏமாற்றம்:
முதலிரண்டு நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டதை அடுத்து, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டம் விரைவாக துவங்கியது. முதல் இன்னிங்சை தொடர்ந்த தமிழக வீரர் முரளி விஜய் (5), எட்வர்ட்ஸ் வேகத்தில் திரும்பினார். அடுத்து வந்த அனுபவ வீரர் ராகுல் டிராவிட் (5), டேரன் சமி பந்தில் போல்டானார்.
அபினவ் அரைசதம்:
பின், அபினவ் முகுந்த், லட்சுமண் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. பொறுப்புடன் ஆடிய இந்த ஜோடி, நிதானமாக ரன் சேர்த்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபினவ் முகுந்த், டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது அரைசதத்தை பதிவு செய்தார். இவருக்கு லட்சுமண் ஒத்துழைப்பு அளித்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்த போது, 149 பந்தில் 62 ரன்கள் எடுத்த அபினவ் முகுந்த், பிஷூ பந்தில் அவுட்டானார்.
லட்சுமண் அபாரம்:
பின், விராத் கோஹ்லியுடன் இணைந்த லட்சுமண், டெஸ்ட் அரங்கில் தனது 52வது அரைசதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்த போது, 53 பந்தில் 30 ரன்கள் எடுத்த கோஹ்லி, டேரன் சமி பந்தில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய லட்சுமண், 129 பந்தில் 56 ரன்கள் எடுத்து, சந்தர்பால் பந்தில் அவுட்டானார்.
தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. சுரேஷ் ரெய்னா (9), கேப்டன் தோனி (4) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் டேரன் சமி 2, எட்வர்ட்ஸ், பிஷூ, சந்தர்பால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.